களைகட்டும் பொங்கல் பண்டிகை!: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது..வாடிவாசலுக்கு தயாராகும் காளைகள்..!!

மதுரை: மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாக அலங்காநல்லூரில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பணிகள் துவங்கின. அவனியாபுரத்தில் வருகின்ற 14ம் தேதியும், இதற்கடுத்து வருகின்ற 15, 16 ஆகிய தேதிகளில் பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன் துவக்கமாக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடைபெறும் பணி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நடைபெறும் களத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் ஜல்லிக்கட்டு விழா குழு சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த விழா குழுவினர், அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தெரிவித்தனர். இதன்பிறகு வாடிவாசலுக்கு வண்ணம் பூசுதல், பார்வையாளர்கள் பகுதி அமைத்தல், தடுப்பு வேலிகள் அமைப்பது போன்ற பணிகளை துவக்க இருப்பதாக ஜல்லிக்கட்டு விழா குழுவினர் தெரிவித்தனர். மேலும் அடுத்த ஓரிரு நாட்களில் போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களின் முன்பதிவு நடைபெறவிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து அரசின் சார்பில் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானத்தில் பார்வையாளர்களை அனுமதிப்பதா? அல்லது காளை மற்றும் மாடுபிடி வீரர்களை மட்டும் அனுமதிப்பதா? என்பது தெரியவரும். ஏற்கனவே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஆண்டு நாட்டுமாடு இனத்தை சேர்ந்த காளைகள் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: