பிரபல ரவுடி குணா மனைவியிடம் போலீஸ் 10 மணி நேரம் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானது. இதனால் ரவுடிகளை ஒடுக்கவும், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்  எடிஎஸ்பி வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, கடந்த ஒரு வாரமாக மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடிகளை கைது செய்து, பல்வேறு வழக்குகள் பதிவு செய்து, சிறையில் அடைத்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குணாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக, சென்னை ஆயுதப்படை போலீஸ் வெங்கடேசன் என்பவரை கடந்த சில நாட்களாக போலீசார் தேடிவந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெங்கடேசனை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டு,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் குணாவிற்கு ஆதரவாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் போந்தூர் சிவா (எ) பரமசிவம் இரண்டாவது முறையாக கைது செய்யபட்டுள்ளான். இரட்டை கொலையின் பின்னணியில் உள்ள குணாவை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து, குணாவின் மனைவியான ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலர் எல்லம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜவில் இணைந்தார்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் மதுரமங்கலம் பகுதியில் உள்ள எல்லம்மாள் வீட்டிற்கு வந்து அவருக்கு சால்வை அணிவித்து சென்றார். இந்நிலையில், நேற்று அதிகாலை ஏடிஎஸ்பி வெள்ளைதுரை தலைமையிலான போலீசார் எல்லம்மாள் உள்பட 6 பேரை சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் அழைத்து சென்று குணா இருக்கும் இடம் குறித்து கேட்டு வாங்கி விசாரணை நடத்தினர். சுமார் 10 நேர விசாரணைக்கு பிறகு எல்லம்மாள் விடுவிக்கப்பட்டார்.

* நெருங்கி பழகிய போலீசார் மீது நடவடிக்கை

குணாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த போலீசார் மீது கைது மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த குற்றப்பிரிவு தனிப்படை  போலீசார் நெருங்கி பழகி வந்த  உயர் அதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள் வரையில், ரவுடி குணாவிடம் கையூட்டு பெற்றவர்கள் லிஸ்ட் தயாரிக்கபட்டு வருகிறது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Stories: