காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஞாயிறு முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின: ஊர் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஞாயிறு முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. மேலும், தேவையின்றி ஊர் சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாரத்தில் 3 நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி ரத்து. இரவு நேர ஊரடங்கு. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என பல்வேறு  கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளது.

இந்நிலையில், நேற்று முழு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் என மாவட்டம்  முழுவதும் தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், ஒரு சிலர் மட்டுமே ஊரடங்கின்போது வெளியே சுற்றினர். அவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். எப்போதும்  மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசலுடன் காணப்டும் காஞ்சிபுரம் காந்தி சாலை, காமராஜர் சாலை, பேருந்து நிலையம், பூக்கடை சத்திரம் ஆகிய பகுதிகளில் அடைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. காஞ்சிபுரம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அபாய ஒலி ஒலித்தவாறு முக்கிய சாலைகளில் வலம் வந்து தேவையின்றி சுற்றி வரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை  விடுத்தார்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களான மருந்தகங்கள், பால், செய்தித்தாள், கடைகள் மட்டுமே செயல்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன. பொது போக்குவரத்து முடக்கப்பட்டதால், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின. குறிப்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்த அளவிலேயே, வாகனங்கள் சென்றன. மேலும், செங்கல்பட்டு மாவட்ட எல்லைகளில் 7 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் கண்காணித்தனர். அத்தியாவசியமின்றி வெளியில் சுற்றுபவர்களை கண்காணிக்க 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

மாமல்லபுரம்: சென்னை - புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதீஸ்வரன் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி மற்றும் போலீசார் இசிஆர், ஓஎம்ஆர் சாலையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் ஊர் சுற்றிய நபர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து திருப்பி அனுப்பினர். இதேபோல், மீண்டும் இரு சக்கர வாகனங்ளில் தேவையில்லாமல் சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதித்தனர். கடற்கரை சாலை, ஐந்து ரதம் சாலை, அர்ச்சுணன் தபசு சாலை உள்ளிட்ட இடங்கள் மற்றும் புராதன சின்னங்களும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாமல்லபுரத்தில், ஊரடங்கால் பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். கோவளத்தில் அனைத்து தெருக்களும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

திருப்போரூர்: ஓஎம்ஆர் சாலை பேருந்து மற்றும் மற்ற வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மருந்துக்கடைகள் தவிர, மளிகைக் கடைகள், சிறிய காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் 100 சதவீதம் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக, வாகன உதிரி பாகங்கள், ஹார்டுவேர்ஸ், இரு சக்கர வாகன விற்பனையகம் உள்ளிட்டவையும் மூடப்பட்டிருந்தன. மேலும், ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஷாப்பிங் மால்கள், பெரிய அளவிலான சூப்பர் மார்க்கெட், திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால்,  பொதுமக்கள்  வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர். டீக்கடைகள் செயல்படாததால் சைக்கிளில் வைத்து டிரம்களில் டீ விற்பனை செய்து சிலர் வருவாய் ஈட்டினர்.

மேலும், கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் (பொறுப்பு) தலைமையில் போலீசார் காலை முதலே தையூர் மார்க்கெட், ஓஎம்ஆர் சாலை, வண்டலூர் சந்திப்பு, கோவளம் சந்திப்பு ஆகிய இடங்களில் காரணம் இன்றி வாகனங்களில் செல்பவர்களை மடக்கி பிடித்து அவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கி எச்சரித்து அனுப்பினர். மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கத்தில் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில், மலையின் அருகில் உள்ள மழைமலை மாதா அருள் தலத்தில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக கோயில் மற்றும் அருள் தலம் பூட்டப்பட்டிருந்தது. இதனால், அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது. மதுராந்தகம் நகரத்திற்கு உள்ளே வருபவர்களையும் நகரிலிருந்து வெளியே செல்பவர்களை மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் உள்ளிட்ட போலீசார் கண்காணித்து திருமணத்திற்கு செல்பவர்களிடம் திருமண அழைப்பிதழ் கேட்டு அனுப்பினர்.

* 481 மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என சுமார் 1100 பேர் முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் முக்கிய சாலைகளில் வலம் வந்தவாறு தேவையின்றி சுற்றிய பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து நோய்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், முழு ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி வீதிகளில் சுற்றிய சுமார் 481 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: