140 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி புதுவையில் கொரோனா பாதிப்பு தினமும் 2 மடங்காக உயர்வு

புதுச்சேரி: புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் இரண்டு மடங்காக உயர்ந்து வருகிறது என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரியில் கடந்த 3ம் தேதி முதல் 15 - 18 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டு வருகிறோம். இதுவரை 18,760 மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்த பணியை முடிக்க முயற்சி செய்து வருகிறோம். கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜனவரி 7ம் தேதி 177 பேரும், 8ம் தேதி 280 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பு தினமும் இரண்டு மடங்காக உயர்ந்து வருகிறது. எனவே, காவல் மற்றும் வருவாய்த்துறையுடன் சுகாதாரத்துறையும் இணைந்து வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு மாநில எல்லைகளில் ரேபிட் பரிசோதனை செய்து, அவர்களுக்கு பாசிடிவ் ஆக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிப்போம். இப்பணியை நாளை (10ம் தேதி) முதல் துவங்க உள்ளோம். ஒமிக்ரான் அறிகுறி தென்பட்ட 140 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் பெங்களூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை முடிவுகள் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: