சினிமா படப்பிடிப்புகளில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை: பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு

சென்னை: பெப்சி என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் உரிய பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். படப்பிடிப்புகளில் பணிபுரியும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.  முகக்கவசம் இல்லாமல் பணிபுரியும் உறுப்பினர்கள் மீது பெப்சி நேரடி நடவடிக்கை எடுக்கும். தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு தளங்களில் முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

உணவு பரிமாறும் உறுப்பினர்கள் உணவு பரிமாறும்போதும், ஒப்பனைக் கலைஞர்கள் நடிகர், நடிகைகளுக்கு ஒப்பனை செய்யும்போதும், உடையலங்கார கலைஞர்கள் உடைகளை அணிவிக்கும்போதோ அல்லது உடைகளை மாற்றும்போதோ கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கேமராவுக்கு முன்னால் நடிக்கும்போது மட்டும் முகக்கவசம் இல்லாமல் இருக்கலாம். மற்றபடி அனைத்து நேரங்களிலும், அனைத்து உறுப்பினர்களும் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும்.டப்பிங், ரெக்கார்டிங், ரீ-ரெக்கார்டிங், மிக்சிங் போன்ற பணிகளுக்காக குளிரூட்டப்பட்ட அறைகளில்  பணிபுரியும் உறுப்பினர்கள், முகக்கவசம் இல்லாமல் பணிபுரியக்கூடாது. படம் சம்பந்தப்பட்ட பணிகள் நடக்கும் இடங்களில் பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: