மதுபானம் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: லோடுமேன் கால் எலும்பு முறிந்தது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் மதுபானம் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த ஊழியரின் கால் லாரியின் அடியில் சிக்கி கால் எலும்பு முறிந்தது.சென்னையில் உள்ள அரசு குடோனில் இருந்து மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு பெரும்புதூர் - திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில், இறக்குவதற்காக ஒரு லாரி நேற்று காலை சென்றது. கடையில் பாட்டில்களை இறக்குவதற்காக, முன்னோக்கி சென்று ரிவர்சில் வந்தபோது, கடையின் எதிரே உள்ள சாலையோர பள்ளத்தில்  லாரியின் சரக்கரம் சிக்கி இறங்கியது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த மது பாட்டில்கள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து உடைந்தன. அந்த நேரத்தில், லாரியில் வந்த மன்னார்குடியை சேர்ந்த லோடுமேன் மார்த்தாண்டம் (29), கீழே குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால் அவரது கால் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது. இதை பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.தகவலறிந்து பெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து, சுமார் ஒருமணி நேர போராட்டத்துக்கு பின் லாரியின் அடியில் சிக்கி தவித்த மார்த்தாண்டத்தை மீட்டனர். அதில், அவர் கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த திடீர் விபத்தால் பெரும்புதூர் - திருவள்ளூர் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: