திருத்துறைப்பூண்டி : மிகக்குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டுவதற்கு நஞ்சை தரிசில் உளுந்து பயறு சாகுபடி செய்வது மிகவும் அவசியம் என்று திருத்துறைப்பூண்டி வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருத்துறைப்பூண்டி வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் அதன் தலைவர் கீராந்தி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அட்மா திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கார்த்தி வரவேற்றார்.
ஆலோசனைக்குழு துணைத் தலைவர் ஜானகிராமன், துணை வேளாண்மை அலுவலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடைதுறை தோட்டக்கலைத்துறை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தொழில்நுட்ப தகவல்களை தெரிவித்தனர். வட்டாரம் முழுவதிலிருந்தும் 22 ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டு தற்போதைய விவசாய நிலைமைகள், அதற்கு அரசிடம் எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
கால்நடை மருத்துவர் சந்திரன் பேசும்போது, கறவை மாடுகளை காப்பீடு செய்து கொள்வதன் அவசியம் பற்றியும், அதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறினர். தோட்டக்கலை உதவி அலுவலர் சண்முகசுந்தரம் பேசும்போது, வீட்டு தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைப்பதன் அவசியம் பற்றியும், அதற்கு அரசு வழங்கும் மானிய திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் பேசும்போது, நஞ்சை தரிசில் உளுந்து பயறு சாகுபடி பரப்புகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும், பயிர் சுழற்சி முறையில் உளுந்து பயறு சாகுபடி செய்வதால் மண்வளம் காக்கப்படும் எனவும், குறைந்த நாட்களில் நல்ல மகசூல் எடுக்க முடியும் எனவும், மிகக் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டுவதற்கு நஞ்சை தரிசில் உளுந்து பயிறு சாகுபடி செய்வது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தார். வேளாண்மை துறையின் மூலம் 50 சதவீத மானியத்தில் விதை கிராமத் திட்டத்தின் கீழ் உளுந்து பயிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். ஆலத்தம்பாடி வருவாய் கிராமத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம கமிட்டி அமைக்கப்பட்டு அதன்மூலம் கிராமங்களில் அத்துமீறி உளுந்து பயிறை சேதப்படுத்தும் கால்நடைகளை பட்டியில் அடைக்க கிராமங்கள்தோறும் கால்நடை வாடிகல் ஏற்படுத்த வேண்டும் என்றார்.ஆலோசனைக்குழு தலைவர் நாகராஜன் முன்மொழிந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது சம்பா அறுவடை தொடங்கியுள்ள நிலையில் அறுவடை இயந்திரங்களின் முகவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவினை மதிக்காமல் தன்னிச்சையாக நிர்ணயம் செய்வதும் தடுக்கப்பட வேண்டும், முறையற்று செயல்படும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆத்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் வேம்பு ராஜலட்சுமி நன்றி கூறினார்.