பொங்கல் பண்டிகையையொட்டி பு.புளியம்பட்டி சந்தையில் மாடுகளுக்கு கொம்புகள் சீவும் பணி தீவிரம்

சத்தியமங்கலம் : பொங்கல் பண்டிகையின்போது விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடு உள்ளிட்ட கால்நடைகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அழகுபடுத்துவது வழக்கம். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை பொங்கல் பண்டிகை நெருங்கும் சமயத்தில் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை வளாகத்திற்கு கால்நடைகளை வர்ணம் பூசுவதற்கு ஏதுவாக கொம்பு சீவுவதற்காக கொண்டு வந்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நேற்று புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு கொம்பு சீவுவதற்காக விவசாயிகள் மிகவும் குறைந்த அளவில் கால்நடைகளை கொண்டு வந்திருந்தனர். பல ஆண்டுகளாக கொம்பு சீவும் பணியில் ஈடுபட்டுள்ள கதவுக்கரை கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி (60) மாடுகளுக்கு கொம்பு சீவி வர்ணம் பூசுவதற்கு ஏதுவாக அழகுபடுத்தினார்.

ஒரு ஜோடி உழவு மாடுகளுக்கு கொம்பு செய்வதற்கு ரூ.500 வரையிலும், சிறிய கொம்பு உள்ள பசு மாடுகளுக்கு ரூ.200 முதல் 300  வரையிலும் கட்டணம் வாங்குவதாகவும், தற்போது கொரோனா காலம் என்பதால் மிகவும் குறைந்த அளவிலான விவசாயிகள் மாடுகளை கொண்டு செய்வதற்காக சந்தைக்கு கொண்டு வருகின்றனர் என கொம்பு சீவும் பணியில் ஈடுபட்டுள்ள ரங்கசாமி தெரிவித்தார்.

கயிறு விற்பனை மந்தம்

பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தங்களது உழவு மாடு, கறவை மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு புதியதாக கயிறு மாற்றி, அலங்கார கயிறுகள் அணிவித்து, மணிகள் கட்டி மாட்டுப் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் புஞ்சைபுளியம்பட்டியில் கால்நடை சந்தை  மற்றும் பொது சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்றைய சந்தையில் அமைக்கப்பட்டிருந்த கயிறு கடைகளில் கால்நடைகளுக்கான அலங்காரக் கயிறுகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது.

நூல் விலை உயர்வால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கயிறுகளின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. தலைக்கயிறு ஒரு ஜோடி ரூ.80க்கும், கழுத்துக் கயிறு ரூ.20க்கும், சங்கு கயிறு ரூ.40க்கும், திருகாணி ரூ.15க்கும், தாம்பு கயிறு ரூ.20க்கும் மணி, வளையல் மற்றும் சலங்கை மணி உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டது. ஒமிக்ரான் தொற்று பரவல்  காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கயிறு விற்பனை மிகவும் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: