தமிழக எம்.பி.,க்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காதது கண்டனத்திற்குரியது: இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா பேட்டி

சென்னை: நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விளக்க தமிழக  எம்.பி.,க்கள் உள்துறை அமைச்சரை சந்திக்க முயற்சித்தனர். ஆனால் அவர்  சந்திக்க அனுமதிக்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை, தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதவாது: சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை, கவர்னர் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கு துணையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இதுபோன்று நடைபெறவில்லை. அனைத்து மாநில கவர்னர்கள் தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு எதிர்பார்க்கிறது.

எனவே இந்தியாவின் கூட்டாட்சி நெறிமுறைகளையும், அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க மத்தியில் ஆளும் பாஜ அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி, பிப்ரவரி மாதத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து பொது வேலை நிறுத்தத்தை நடத்த இருக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விளக்க தமிழக எம்.பி.,க்கள் உள்துறை அமைச்சரை சந்திக்க முயற்சித்தனர். ஆனால் அவர் சந்திக்க அனுமதிக்கவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

பஞ்சாப் விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தொடர்ந்து பஞ்சாப்பில் விவசாயிகள் மோடிக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவற்றை எல்லாம் தெரிந்து தான் மோடி பஞ்சாப் செல்வது திட்டமிடப்பட்டது. பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் உடனே மாற்றம் செய்யப்பட்டது. அந்த மாற்றத்தை ஏன் செய்தார்கள், யார் செய்தார்கள் என்பதை உள்துறை அமைச்சர் தான் விளக்க வேண்டும். அதற்கு பதிலாக பஞ்சாப் விவசாயிகள், பொதுமக்களை குற்றம் சொல்வது அவர்களை அவமதிப்பதாகும். இவ்வாறு டி.ராஜா கூறினார்.

Related Stories: