ஊட்டியில் ஒரு தனி அமைப்பு 7,500 ஏக்கரை ஆக்கிரமித்துள்ளது தமிழக அரசுக்கு ரூ.4000 கோடி குத்தகை பணம் தரவில்லை; அதை மீட்க வேண்டும்: முதல்வருக்கு வேல்முருகன் எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) பேசியதாவது: ஊட்டிக்கு பொது கணக்கு குழு சார்பாக ஆய்வுக்கு சென்றிருந்தோம். ஒரு தனி அமைப்பு 7,500 ஏக்கரை ஆக்கிரமித்து போலியாக பட்டாக்களை பெற்றுக்கொண்டு கேரளா வங்கியில் கடன் வாங்கியுள்ளனர். கேரள வங்கிக்கு கடனை திருப்பி கட்டாததினால், அந்த இடம் கேரளா சொந்தம் கொண்டாடும் நிலை உள்ளது. அந்த நிறுவனம் ரூ.4 ஆயிரம் கோடி லீஸ் தொகையை தமிழகஅரசுக்கு செலுத்தவில்லை. தமிழக அரசை கடந்த காலங்களில் ஏமாற்றி இருக்கிறார்கள்.

முதல்வர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் தலையிட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வர வேண்டியதை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனம் இந்தியன் வங்கியில் வாங்கிய கடனுக்காக விவசாயியிடம் தொலைபேசியில் மிரட்டுகிறார்கள். இப்படி மிரட்டினால் நான் சாக வேண்டியதுதான் என்று அந்த விவசாயி கூறுகிறார். வங்கி ஊழியர்கள், சாவதாக இருந்தால்கூட எங்களுக்கு தர வேண்டிய பணத்தை தந்துவிட்டு சாகு என்று சொல்கிறார்கள். கந்துவட்டி கும்பல் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த கால ஆட்சியில் பலர் தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளனர். கடந்த கால ஆட்சியில் நடந்த தவறுகளுக்கு தமிழக முதல்வர் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: கடந்த கால ஆட்சி, கடந்த கால ஆட்சி என்று அடுக்கிக் கொண்டே வருகிறார். கடந்த கால ஆட்சியில் எங்கு, எப்போது, யாரால் சம்பவம் நடந்தது என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

வேல்முருகன்: 2020ம் ஆண்டு (அதிமுக ஆட்சி) முடிகிற தருவாயில் பண்ருட்டி தொகுதியில் முந்திரி வியாபாரி கடத்தி செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு நீதி விசாரணை கேட்டேன். அன்றைய முதல்வர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை முடிவடைந்துள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: