ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் முக கவசம் அணிவது குறித்து 28 இடங்களில் விழிப்புணர்வு: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை

அம்பத்தூர்: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், 28 இடங்களில் முக கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி முதல் ஊராட்சி வரை முக கவசம் அணிவது,  சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்தநிலையில், ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அம்பத்தூரை அடுத்த பாடி, சி.டி.எச் சாலை, மேம்பாலம் அருகில் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், பொதுமக்களுக்கு முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் சானிடைசர் கொடுத்து அறிவுரை கூறினார்.

இதன்பின்னர் கமிஷனர் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் தொற்று  அதிகமாக பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவவேண்டும். கைகளில் அடிக்கடி சானிடைசர் போட்டு கொள்ளவேண்டும். ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், இன்று 28 இடங்களில் முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முககவசம் அணியாத 500க்கும் மேற்பட்டோருக்கு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேலும், முக கவசம் அணியாமல் வருவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அரசின் ஊரடங்கு உத்தரவுப்படி, மேலும் சட்ட திட்டங்கள் அறிவிக்கப்படும்.இவ்வாறு கூறினார்.

Related Stories: