நாட்டின் மின்நுகர்வு 110.34 பில்லியன் யூனிட்: 2020 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 4.5% உயர்வு

மாதம்    மின்நுகர்வு

    2020    2021

நவம்பர்    96.88    99.37

டிசம்பர்    105.62    110.34

சென்னை: உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக முதல் அலையை விட இரண்டாவது அலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பலரும் உயிரிழப்புகளை சந்தித்தனர். பெரும்பாலான இடங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். இதையடுத்து நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, முழுமையான ஊரங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில்கள் அனைத்தும் முடங்கின. மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே இருந்தனர்.

குறிப்பாக நாட்டில் உள்ள பெரிய தொழிற்சாலைகளான துணி உற்பத்தி தொழிற்சாலைகள், இரும்பு உருக்கும் தொழிற்சாலைகள், சணல் தொழிற்சாலைகள், பருத்தி தொழிற்சாலைகள், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த தொழிற்சாலைகள் முழுவதும் இயங்கவில்லை. இதேபோல் ஐடி நிறுவனங்களும் முடங்கியது. இதுபோன்ற காரணங்களினால் சம்மந்தப்பட்ட இடங்களில் மின்சாரம் பயன்படுத்துவது பெருமளவில் குறைந்தது. பிறகு ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

மேலும் பொதுமக்களும் அதிகப்படியாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக கொரோனாவின் பாதிப்பு கொஞ்சம், கொஞ்சமாக குறைந்தது. நிலைமை கட்டுக்குள் வந்தது. இதனைத்தொடர்ந்து 50 சதவீத தொழிலாளர்களுடன் அனைத்து தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பிறகு தொற்று மேலும் குறைந்தது. இதனால் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் முழுமையாக செயல்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் அவை கொஞ்சம், கொஞ்சமாக முழுமையாக இயங்க தொடங்கியது.

குறிப்பிட்ட சில ஐடி நிறுவனங்களை தவிர மற்ற நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக இயங்கி வருகிறது. இதன் காரணமாக சம்மந்தப்பட்ட இடங்களில் வழக்கம் போல் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் மின்நுகர்வு தற்போது அதிகரித்துள்ளது. அதாவது அதிகபட்சமாக ஒருநாளினுடைய மின்தேவை கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் 183.38 ஜிகாவாட்டாக இருந்தது. இதுவே 2020ம் ஆண்டு 182.78 ஜிகாவாட்டாகவும், 2019ம் ஆண்டு 10.49 ஜிகாவாட்டாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் மின்நுகர்வு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது 2021ம் ஆண்டு நவம்பரில் மின்நுகர்வு 99.37 பில்லியன் யூனிட்டாக இருந்தது. 2020ம் ஆண்டில் 96.88 பில்லியன் யூனிட்டாகவும், 2019ம் ஆண்டில் 93.94 பில்லியன் யூனிட்டாகவும் இருந்தது. இதனைத்தொடர்ந்து 2021ம் ஆண்டு டிசம்பரில் மின்நுகர்வு 110.34 பில்லியன் யூனிட் ஆகும். இது 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகமாகும். அதாவது 2020ம் ஆண்டில் மின்நுகர்வு 105.62 பில்லியன் யூனிட்டாகவும், 2019ம் ஆண்டில் 101.08 பில்லியன் யூனிட்டாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: