ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு-அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று துவக்கி வைக்கிறார்

சோமனூர் : தமிழக அரசு இன்று முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உள்ளது. சோமனூரில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று வழங்கி துவக்கி வைக்கிறார். தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷனர் கார்டுதாரர்களுக்கும் உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பை இன்று முதல் வழங்க உள்ளது.  பொங்கல் வாழ்த்துக்களுடன் கூடிய துணிப்பையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, கரும்பு என மொத்தம் 21 பொருட்களை தமிழக அரசு வழங்குகிறது.

பரிசு தொகுப்பு பொருட்களை தயார் செய்து அனுப்பும் பணியில் உணவு வழங்கல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் சூலூர் மற்றும் பீளமேடு வடக்கு தெற்கு பகுதி தாலுகாவின் 247 ரேஷன் கடைகளில் உள்ள ஒரு லட்சத்து 81 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள்  கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கு மூலமாகவும், அன்னூர் தாலுகா பகுதியில் உள்ள 81 ரேஷன் கடைகளில் உள்ள 82 ஆயிரத்து 824  கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் பதுவம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கு மூலமாகவும் வழங்கப்பட உள்ளது.

இதற்காக கண்காணிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கூடுதல் பணியாளர்களை நியமித்து முழுவீச்சில் பொருட்களை எடையிட்டு அனைத்து கடைகளுக்கும் முதல்கட்டமாக வழங்கியுள்ளனர். இன்று சோமனூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பொங்கல் பரிசு பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்து நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். இதையடுத்து அந்தந்த ரேஷன் கடைகளில் டோக்கன் வினியோகம் செய்து சமூக இடைவெளியுடன் பொருட்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: