கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற உத்தரவின்படி கோமுகி ஆற்றங்கரையோர பகுதியில் 700 லிட்டர் எரிசாராயம் தீவைத்து அழிப்பு

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பைத்தந்துறை கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (எ) தொடுக்கு சேகர், சங்கராபுரம் அடுத்துள்ள பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (எ) நடுபையன். இவர்கள் இருவரும் சேர்ந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 கேனில் 700 லிட்டர் எரிசாராயத்தை விற்பனைக்கு பைத்தந்துறை கிராம பகுதியில் பதுக்கி வைத்திருந்ததை கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் கடந்த அக்டோபர் மாதம் கண்டுபிடித்து, எரிசாராயத்தை பறிமுதல் செய்து சேகர், ஜோசப் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் 2 பேரும், குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தை அழிக்க வேண்டி நீதிபதி அருண்பாண்டியன் உத்தரவிட்டார். இதையடுத்து கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் விஜயபிரபாகரன் தலைமையில் மதுவிலக்கு ஆய்வாளர் மூர்த்தி முன்னிலையில் தியாகதுருகம் சாலை பகுதி கோமுகி ஆற்றங்கரையோர பகுதியில் எரிசாராயம் கீழே கொட்டி தீவைத்து அழிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் சலீம், கிராம உதவியாளர் அண்ணாமலை மற்றும் மதுவிலக்கு போலீசார் உடனிருந்தனர்.

Related Stories: