கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு : புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு

புதுச்சேரி: தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது. மேலும் திரையரங்குகள், பேருந்துகளில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என புதுவை கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவி வரும் சூழ்நிலையில் அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளையும் மருத்துவ கட்டமைப்பையும் மேம்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில் புதுச்சேரி கோவிட் மேலாண்மை உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று கவர்னர் மாளிகையில் நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். வளர்ச்சி ஆணையர் பிரசாந்த் கோயல், சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், செய்தித்துறை செயலர் வல்லவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, கோவிட் தலைமை அதிகாரி ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் புதுச்சேரி பிரதிநிதி சாய்ரா பானு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கவர்னர் தமிழிசை பேசுகையில், கொரோனா 3வது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் புதுச்சேரியில் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். இன்று (நேற்று) முதல் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையுடன் பிற அவசிய, அறுவை சிகிச்சைகளையும் செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.ஊரடங்கு முறை ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் `புதுச்சேரி மாதிரி’ கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். 2வது அலையின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

சித்தா, இயற்கை மருத்துவ முறை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் என்பதால், ஆங்கில மருத்துவ முறைக்கு இணையாக சித்தா, இயற்கை மருத்துவ முறையை கையாள வேண்டும். தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும். கோவிட் கட்டுப்பாட்டு மையத்தை உடனடியாக இயக்க வேண்டும். நடமாடும் பல்ஸ் ஆக்சிமீட்டர் வாகனம், நடமாடும் பிராணவாயு வாகனம் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.கொரோனா நோய் பரவல் குறித்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள், பிராணவாயு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை தயார் படுத்த வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் கோவிட் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். திரையரங்குகள், கடை வீதிகள், பேருந்துகள், கலையரங்குகள் ஆகியவற்றில் 50 சதவீதம் மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்களில் உடல் வெப்பநிலையை சோதிக்க வேண்டும். அனைத்து அரசுத் துறைகளையும் இதில் ஈடுபடுத்த வேண்டும், என்றார்.

அதனை தொடர்ந்து, புதுச்சேரியில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என சுகாதாரத்துறை சார்பு செயலர் புனித மேரி எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவர். அதேபோல தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒப்பந்த ஊழியர்களும் சம்பளமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவர். வரும் 7ம் தேதிக்குள் 100 சதவீத தடுப்பூசி என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசு அலுவலக வளாகங்களில் கட்டாயம் முகக்கவசம அணிய வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: