புதுக்கோட்டை அருகே தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் மருத்துவமனையில் பரிதாப சாவு: ரூ.10 லட்சம் நிவாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தலையில் குண்டு பாய்ந்த சிறுவன், தஞ்சை அரசு மருத்துவமனையில் சிசிகிச்சை பலனின்றி நேற்று இறந்தான். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் தமிழ்நாடு காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் கடந்த 30ம்தேதி காலை 8 மணியளவில் மத்திய தொழிலக பாதுகாப்பு படைவீரர்கள் (சிஐஎஸ்எப்) மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் திருச்சி மத்திய மண்டல போலீசாரும் துபாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பசுமலைப்பட்டி மலையடிவாரத்திலிருந்த குடிசை வீட்டில் உணவருந்தி கொண்டிருந்த கலைச்செல்வன் மகன் புகழேந்தி (11) தலையில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இதையடுத்து சிறுவன் புகழேந்தி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுவனின் தலையில் மூளைப்பகுதி வரை குண்டு பாய்ந்து இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவன் புகழேந்தி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மூலம் துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி, அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சிறுவன் புகழேந்தி உயிரிழந்தான். இன்று (4ம்தேதி) காலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மறியல் போராட்டம்: சிறுவனின் உடல் தஞ்சை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (4ம்தேதி) பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுவன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். சிறுவன் இறந்த தகவல் அறிந்த உறவினர்கள் தஞ்சை மருத்துவமனை வளாகத்தில் குவிந்து, தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

சிறுவனின் இறப்புக்கு நீதிகேட்டு பெற்றோர், உறவினர்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் நேற்று மாலை 7 மணியளவில் காரைக்குடி- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பொம்மாடிமலை என்ற இடத்தில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சவந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

ரூ.10 லட்சம் நிவாரணம்  இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நார்த்தாமலை சரகத்தில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில். கடந்த 30-12-2021 அன்று துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்று வந்தது. இப்பயிற்சியின் போது, நார்த்தாமலைக்கு அருகில் உள்ள கொத்தமங்கலப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது, அச்சிறுவனின் தலையின் இடதுபக்கத்தில் ஒரு குண்டு பாய்ந்துள்ளது. குண்டு பாய்ந்த அச்சிறுவன் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.

சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, மருத்துவர்களால் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (3-1-2022) மாலை அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இத்துயர சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்த புகழேந்தியின் குடும்பத்திற்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: