கொடநாடு கொலை வழக்கு: தனபால், ரமேஷுக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு

ஊட்டி: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் மற்றும் சாட்சிகள் என 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தடயங்களை அழித்தது தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்கள் இருவரையும் வரும் 19ம் தேதி வரை மேலும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார். கொடநாடு கொலை வழக்கு விசாரணை கடந்த 4 மாதங்களாக ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், சில நிர்வாக காரணங்களுக்காக தற்போது  அந்த விசாரணை கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நடந்து வருகிறது.

கொடநாடு கொலை வழக்கின் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாயிடம் வரும் 7ம் தேதி கோவையில் விசாரணைக்கு ஆஜராகும்படி தனிப்படை போலீசார் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர். மற்றொரு குற்றவாளியான உதயனையும் விசாரணைக்காக 8ம் தேதி வருமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: