அரசு விழாவில் முதல்வர் முன்னிலையில் பாஜ அமைச்சர்- காங். எம்.பி மோதல்: கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு விழாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷ், பாஜ அமைச்சர் அஸ்வத் நாராயண் ஆகியோர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் அரசு சார்பில் அம்பேத்கர் மற்றும் கெம்பேகவுடா சிலை திறப்பு விழா நடந்தது. இதில் பெங்களூரு ஊரக தொகுதி காங்கிரஸ் எம்பி டி.கே. சுரேஷ் அழையா விருந்தாளியாக கலந்து கொண்டார். விழாவில் அமைச்சர் அஸ்வத் நாராயண் பேசுகையில் ‘ராம்நகரில் பாஜ எம்எல்ஏ இல்லை என்றாலும்  வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பதற்காக முதல்வர் பொம்மை வந்துள்ளார். ஆண்மை தன்மை இருந்தால் பாஜவை போல் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என  கூறினார். இதனால் கோபமடைந்த காங்கிரஸ் எம்பி டி.கே.சுரேஷ்  அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முதல்வர் முன்னிலையில் இருவரும் ஒருமையில் பேசிக்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனே, போலீசார் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் மைக், பேனர்களை கிழித்தெறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் மேடையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: