மேகதாது அணை வழக்கு 25ம் தேதி விசாரணை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

புதுடெல்லி: மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவை கலைத்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து  தமிழக அரசு தொடர்ந்த  மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 25ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தாமாக முன்வந்து பதிவு செய்தது. இவ்வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் முடித்து வைத்தது.

அதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆக. 11ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில், ‘சட்ட விதிகளுக்கு உட்பட்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், மேகதாது அணை தொடர்பாக கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிந்து குழு அமைத்தது. இவ்விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவை கலைத்தது மட்டுமின்றி, தடையும் விதித்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘மேகதாது அணை தொடர்பாக இடையீட்டு மனுக்கள், பிரதான வழக்கின் மனுக்கள் நிலுவையில் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தின் போது நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் அமர்வு, தமிழக அரசு தொடர்ந்த  மேல்முறையீட்டு மனு உள்ளிட்ட மனுக்கள் மீதான விசாரணை வரும் 25ம் தேதிக்கு நடைபெறும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Related Stories: