தேவகோட்டை தாலுகாவில் மழைநீரில் மூழ்கிய நெற்கதிர்கள்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தேவகோட்டை : தேவகோட்டை தாலுகா, கண்ணங்குடி வட்டாரத்தில் தொடர் கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள நெற்கதிர்கள் தண்ணீர் மூழ்கின.தேவகோட்டை தாலுகா, கண்ணங்குடி வட்டாரத்தில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழையின்போது தீவிர நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நெற்கதிர்கள் முற்றிய நிலையில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக வட்டாரத்தில் விட்டு விட்டு தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதனால் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீருக்குள் மூழ்கி உள்ளன. இதனால் நெற்கதிர்கள் அனைத்தும் அழுகி சேதமடைந்து விடும் அபாயத்தில் உள்ளது.

குறிப்பாக கண்ணங்குடி வட்டாரத்தின் கேசனி, சிறுவாச்சி, ஆனையடி, கீழப்புதுக்குடி, மேலப்புதுக்குடி, தேரளப்பூர், மித்ராவயல், மொன்னானி, கொடூர், பெருங்கானூர், குடிக்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பல நூறு ஏக்கர் பரப்பளவிலான நெற்கதிர்கள் மழையால் பெரும் பாதிப்படைந்துள்ளன. நெற்கதிர்கள் முற்றிய நிலையில் தண்ணீருக்குள் சாய்ந்து கிடப்பதால் இனி காப்பாற்றவே முடியாது என விவசாயிகள் வேதனை தெரிவித்த

னர்.

மேலும் சிறுவாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சில கிராமங்களில் நடைபெற்று வரும் நெல் அறுவடை மழையால் பெரும் பாதிப்படைந்துள்ளது. தொடர் கனமழையால் அறுவடையில் ஈடுபட்டிருந்த இயந்திரங்களைக்கூட வயல்களிலிருந்து மீட்பதற்கு பெரும் சிரமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். வடகீழ்குடி கண்மாயில் தேங்கி உள்ள மிதமிஞ்சிய தண்ணீரை குறைக்க அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்மாயின் கழுங்கை திறந்துவிட்டு உதவ பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு கேசனி கிராம விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இப்பகுதி வட்டார வேளாண்மை அதிகாரிகளும், பயிர்க் காப்பீடு நிறுவன அதிகாரிகளும் உடனடியாக பாதிக்கப்பட்ட நெல் வயல்களை உரிய ஆய்வு செய்து காப்பீடு வழங்க வேண்டும், தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரணம் கிடைக்க உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: