ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ராப்பத்து உற்சவம் துவக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள், திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதில் வைகுண்ட ஏகாதசி விழா முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்தவகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யபிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாசுரங்களையும் இந்த திருவிழா நாட்களில் அரையர்கள், பெருமாள் முன் அபிநயத்தோடு பாடுவது இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். எனவே இது திருவத்யயன உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த 20 நாள் உற்சவம் முழுவதும் பெருமாள் முன்னிலையிலேயே நடக்கிறது. தாயாருக்கு இந்த உற்சவத்தில் எவ்வித பங்கேற்பும் இல்லை. ஸ்ரீரங்கம் கோயில் ரங்கநாயகி தாயார் படிதாண்டா பத்தினி என்பதால் வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொண்டு ஆழ்வார்களின் தீந்தமிழ் பாசுரங்களை கேட்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்காமல் போனதற்கு அவர் அடியார்களின் கனவில் தோன்றி வருந்தினாராம். இதனையடுத்து பெருமாளுக்கு நடத்தியதை போல் தாயாருக்கு  தனியாக 10 நாள் திருவத்யயன உற்சவம் நடத்தும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் தாயார் திருவத்யயன உற்சவத்தின் திருமொழித் திருநாள்(பகல் பத்து உற்சவம்) கடந்த 25ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற்றது. விழாவின் அடுத்த பகுதியான ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கி வரும் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணிக்கு ரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்தடைந்தார். அங்கு அலங்கார கோஷ்டி வகையறா கண்டருளினார். பின்னர் இரவு 8.30 மணியளவில் திருவாய்மொழி மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Related Stories: