மழை இல்லாததால் குறைந்து கொண்டே வரும் வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்று விட்ட நிலையில், அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த வைகை அணைக்கு வெள்ளி மலை, அரசரடி, மூலவைகை ஆறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்தும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் நீர்வரத்து ஏற்படுகிறது.இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 3 முறை முழுக்கொள்ளவை எட்டியது. இதில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 3 வது முறையாக முழுக்கொள்ளவை எட்டி அணையில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 இதில் ஒரு சில நாட்களில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதன்பின்பு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து காணப்பட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைக்கு நீர்வரத்து சராசரியாக 3 ஆயிரத்திற்கும் மேல் இருந்தது. பின்னர் மழை குறைவால் நீர்வரத்து குறைந்து, தற்போது நீர்வரத்து 449 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70.10 அடியாக இருந்த நிலையில், தற்போது நீர்மட்டம் குறைந்து 68.96 அடியாக உள்ளது. அணையில் இருந்து 869 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்று விட்ட காரணத்தால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.

வைகை அணை பூங்காவை 3 நாட்கள் மூட உத்தரவு

தேனி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக வைகை அணை விளங்குகிறது. இதன் முன்பாக இரு கரைகளிலும் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் பொழுபோக்கு அம்சங்கள் அதிகம் உள்ளது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம், வைகை அணையிலும் அதிகளவு மக்கள் கூடுவதால் நோய் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், 3 நாட்களுக்கு வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதித்து தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் ஜன.2ம் தேதி வரையில் வைகை அணை பூங்காவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்த்து, மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முகக்கவசம், சமூக இடைவெளி ஆகிய கட்டுப்பாடுகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கலெக்டர் முரளீதரன் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: