டெங்கு காய்ச்சல் பாதித்த தனது குடும்பத்தினரை அரசு மருத்துவமனையில் சேர்த்த கோவை நீதிபதி: மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம்

கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக பணியாற்றுபவர் ஏ.எஸ்.ரவி. இவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மூவரும் கடந்த 16-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு அனைவரும் கடந்த 23-ம் தேதி நலமுடன் வீடு திரும்பினர்.

இதையடுத்து சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து அரசு மருத்துவமனையின் டீனுக்கு நீதிபதி ஏ.எஸ்.ரவி அனுப்பியுள்ள கடிதத்தில், எனது குடும்ப உறுப்பினர்களை கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் ஏதேனும் ஒன்றில் அனுமதிக்குமாறு பலரும் அறிவுறுத்தினர். அங்கு செலவாகும் முழு தொகையையும் திரும்பப்பெற்றுக் கொள்ள எனக்கு வழிவகை இருந்தும், அரசு மருத்துவமனையில் அவர்களை அனுமதிப்பதில் உறுதியாக இருந்தேன். ஏனெனில், இங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு, சேவை குறித்து அறிவேன். எனது 21 ஆண்டுகால பணிக்காலத்தில், சிகிச்சைக்காக எப்போதும் அரசு மருத்துவமனைகளையே நாடியுள்ளேன். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கடந்த 2020 நவம்பரில் உங்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றேன்.

டாக்டர்கள் பொன்முடிச்செல்வன், மதுவந்தி, பாபு, ஜெயலட்சுமி, சீனிவாசன், விமலா தியாகராஜன், பிரகாஷ்ராஜ், பிரியங்கா, பிரவீன் ஆர்யா மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்ற மருத்துவர்கள் சிறப்பாக கவனித்துக் கொண்டனர். அங்கு கிடைத்த சிகிச்சைக்கு மட்டுமல்ல, அவர்களின் நேர்மறையான ஆலோசனை, ஊக்குவிப்பு, அன்பு ஆகியவற்றுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். எனது மனைவி, மகள் ஆகியோர் மோசமான நிலையில் இருந்தபோதும் மருத்துவர்கள் அச்சுறுத்தவோ, பதற்றமடையச் செய்யவோ இல்லை. இதுதவிர, தீவிர சிகிச்சை பிரிவில் இரவும், பகலும் பணியாற்றிய செவிலியர் மீனா, செவிலிய மாணவிகள் சோனா, சவுமியா, இதர செவிலியர்களுக்கும், தூய்மைப்பணியாளர்களுக்கும் நன்றி. மனிதனுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு ஆற்றும் சேவை. அவர்களின் சேவையில் கடவுளை காண்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: