பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி விமர்சனம் பாமக தயவின்றி எடப்பாடி பழனிசாமி முதல்வராக தொடர்ந்திருக்க முடியாது

சென்னை: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பேசியதாவது: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் அதை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இப்போது உச்ச நீதிமன்றம் சென்று உள்ளோம். அங்கு நிச்சயம் வெற்றி பெறுவோம். உச்ச நீதிமன்றத்தில் வெற்றி கிடைக்காவிட்டாலும் வேறு வழியில் நமக்கு 10.5 இட ஒதுக்கீட்டில் நமக்கு வெற்றி கிடைக்கும். 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் சட்ட ரீதியான போராட்டம் தொடரும்.

அதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால், அரசியல் ரீதியான போராட்டம் தொடரும். 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நாம் பெற்றே தீருவோம். இனி வரும் காலத்தில் நாம் ஆள வேண்டும் என்று மட்டுமே வாக்குகளை கேட்போம். நடந்து முடிந்த தேர்தலில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக நிறைய சமரசம் செய்து கொண்டோம். வெறும் 23 இடங்களில் மட்டுமே போட்டியிட்டோம். 2019ல் அதிமுக கூட்டணியில் பாமக இருந்ததால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். பாமக தயவில்லாமல் அவர் முதல்வராக தொடர்ந்திருக்க முடியாது. 10.5 இடஒதுக்கீடு கிடைக்க அவர் உதவியாக இருந்தார். 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறு. தீர்ப்பை விமர்சனம் செய்யக்கூடாது என்கிறார்கள். எப்படி விமர்சனம் செய்யாமல் இருக்க முடியும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: