சென்னையை சேர்ந்த பிரபல ஜவுளி குழுமம் ரூ.65 கோடி வரி ஏய்ப்பு: வணிகவரித்துறை நடத்திய சோதனையில் கண்டுபிடிப்பு

சென்னை: சென்னையை சேர்ந்த பிரபல ஜவுளி குழுமம் ரூ.65 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது என்று வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் மொத்த வருவாயில் வணிகவரித்துறை மூலம் 60% பங்களிப்பை கொண்டிருக்கிறது. இந்நிலையில், அரசின் வருவாயை பெருக்கவும், வரி இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து முதலில் ஜவுளி கடைகளில் சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று சென்னையில் 6 முக்கிய ஜவுளிக்கடைகள் உட்பட மாநிலம் முழுவதும் 103 இடங்களில் வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 3 நாட்கள் வரை நீடித்தது. இதில், சென்னையைச் சார்ந்த பிரபல ஜவுளி வியாபார குழுமத்தின் சென்னை, கோவை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் உள்ள ஏழு கடைகளில் கடந்த 2017-18 முதல் 2021-22ம் ஆண்டு வரை வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வணிகவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த பிரபல ஜவுளி வியாபார குழுமத்தின் சென்னை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள 7 கடைகள் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் போது, 2017-2018 முதல் 2021-2022 வரையிலான காலத்திற்கு செலுத்தப்பட வேண்டிய வரித் தொகை ரூ.10.62 கோடி, அனுமதிக்கப்படாத உள்ளீட்டு வரி வரவு துய்த்தது ரூ.21.90 கோடி, இருப்பு விவர வித்தியாசம் ரூ.5.90 கோடி, முறையற்ற வரிவிலக்கு கோரிய இனங்கள் ரூ.22.96 கோடி,மற்றும் இதர வரி ஏய்ப்பு இனங்கள் ரூ.4.23 கோடி உட்பட மொத்தம் ரூ.65.61 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது சில முறைகேடுகளுக்காக மேற்கூறிய வணிக நிறுவனத்திடமிருந்து ரூ.2.12 கோடி அரசுக்கு வரி வசூல் செய்யப்பட்டது. மேலும், இதர வரி ஏய்ப்பு இனங்களுக்காக மேல்நடவடிக்கை வணிகவரித் துறையினரால் தொடரப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: