வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் ₹2 கோடி வர்த்தகம்

வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று அதிகளவில் மாடுகள் குவிந்ததால் வர்த்தகம் ₹2 கோடிக்கு மேல் எகிறியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பெரிய கால்நடை சந்தைகளில் ஒன்றாக கருதப்படும் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கூடுகிறது. ஜெர்சி வகை கலப்பினம் மற்றும் நாட்டு கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், ஆடு, கோழிகள் என அனைத்து கால்நடைகளும் இங்கு விவசாயிகள் மற்றும் கால்நடை வியாபாரிகளால் கொண்டு வரப்படுகின்றன. அதனுடன் கால்நடைகளுக்கான மணிகள், கயிறுகள், விவசாய கருவிகள், காய்கறிகள்கூட சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொய்கை மாட்டுச்சந்தைக்கு அனுமதியில்லாத நிலையில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சில மாதங்களாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் களைக்கட்டிய சந்தை பின்னர் தொடர் மழையின் காரணமாக சரிவை கண்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் பொய்கை மாட்டுச்சந்தை கூடியது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரம் முதல் 1,500 கறவை மாடுகள், உழவு மாடுகள் என விற்பனைக்காக வந்திருந்தன.

கறவை மாடு ஒன்று ₹50 ஆயிரம் முதல் ₹60 ஆயிரம் வரை விற்பனையானது. ஜல்லிக்கட்டு காளைகள் ₹1 லட்சம் முதல் விற்பனையாகின. நேற்று நடந்த சந்தையில் ₹2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories: