முதுமலை புலிகள் காப்பக வளர்ப்பு யானைகளுக்கு உடல் பரிசோதனை

கூடலூர் : முதுமலை புலிகள் காப்பக வளர்ப்பு யானைகளுக்கு இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இரண்டு நாள் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ரத்தம், சளி, சாணம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. இந்த யானைகளுக்கு முதுமலை புலிகள் காப்பக மருத்துவ குழு சார்பில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எடை பரிசோதனை செய்யப்பட்டு யானைகளின் உடல்நிலை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 27, 28 ஆகிய இருநாட்கள் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள்  யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர். இங்குள்ள யானைகளின் உடல் நிலை மற்றும் அவற்றிற்கான பிரச்னை குறித்து புலிகள் காப்பக மருத்துவக் குழுவிடம் ஆலோசனை செய்தனர். பின்னர் யானைகளின் ரத்தம் மற்றும் பிற மருத்துவ மாதிரிகளை சேகரித்துள்ளனர். இவை பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகளை முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்திற்கு அளிக்கப்படும். இந்த பரிசோதனையின் மூலம் யானைகளின் நோய்கள் மற்றும் அவற்றின் நிலை மதிப்பீடு செய்யப்படும். வழக்கமாக நடைபெறும் நடைமுறைகளில் இதுவும் ஒன்று என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி மருத்துவர் கரிகாலன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்துள்ளனர். இவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு பின் அது குறித்த தகவல்களை புலிகள் காப்பகத்தில் உள்ள மருத்துவ குழுவிற்கு தெரிவிக்கப்பட்டு அதனடிப்படையில் தேவையான சிகிச்சை முறைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

Related Stories: