ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர்கள் உதவித்தொகை அதிகரிப்பு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் மணிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2021-2022ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும், இதுவரை வழங்கப்பட்டு வந்த  இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகிய  நலத்திட்ட உதவிகள் இதர நல வாரியங்களால் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகைக்கு இணையாக ரூ.1.53 கோடி செலவில் உயர்த்தி வழங்கப்படும்” என்றார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தூய்மை பணியாளர் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ள  உறுப்பினர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும், இதுவரை வழங்கப்பட்டு வந்த  இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகள் இதர நல வாரியங்களால் வழங்கப்படுவது போல உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பணியிடத்தில் விபத்தால் மரணம் அடைந்தால் ரூ.5 லட்சம், ஒரு கை, கால், கண் இழந்தால் ரூ.1 லட்சம், இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரம்,திருமண உதவித்தொகை ரூ.5 ஆயிரம், கல்வி உதவித்தொகை ரூ.4 ஆயிரம், விடுதியில் தங்கி படித்தால் ரூ.5ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: