காங்கிரஸ், பாஜகவை தவிர்த்து மூன்றாவது அணியை உருவாக்கும் மம்தா முடிவை தேர்தலுக்கு பிறகு தான் உறுதி செய்யப்படும் கனிமொழி எம்பி பேச்சு

திருவள்ளூர்: திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி சார்பில் 500 பெண்ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பால்வளத்துறை அமைச்சர ஆவடி சா.மு. நாசர்  தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சந்திரன், நிர்வாகிகள் குமாரி விஜயகுமார், ஆதிசேஷன், கேதிராவிடபக்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சிசு.ரவிச்சந்திரன், கோவிந்தம்மா, பிரியா தர்ஷினி ஆகியோர் வரவேற்றனர். இந்த விழாவில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி கலந்துகொண்டு மகளிர்களுக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, கலைஞரை போலவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். பெண்கள் சுய உதவி குழு கலைஞர் காலத்தில் தான் உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு பேருந்தில் இலவச கட்டணம், கல்லூரியில் பயில கல்விக் கட்டணத்தையும் வழங்கியது திமுக அரசுதான். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். தமிழக முதலமைச்சரை நாடு முழுவதும் ஆச்சரியத்துடன் பார்க்க கூடிய சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். இந்த ஆட்சியானது மக்களுக்கான ஆட்சியாக உள்ளது.

தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது பெண்கள்தான். எனவே பெண்களுக்கு சம உரிமையை வழங்கி வரும் திமுகவிற்கு பெண்களும், பொதுமக்களும் நல்ல ஆதரவை தரவேண்டும். காங்கிரஸ், பாஜகவை தவிர்த்து மூன்றாவது அணியை உருவாக்கும் மம்தா பானர்ஜி முடிவை தேர்தலுக்குப் பிறகு தான் உறுதி செய்யப்படும்.

திருவெற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளையும் ஆய்வு செய்ய முதல்வர் ஆணையிட்டுள்ளார். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பெண்களுக்கு உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாய்ப்பு அளித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: