டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியாவை ஒப்படைப்பதில் தாமதம்

புதுடெல்லி: ஏர் இந்தியாவை  டாடா குழுமம் கையகப்படுத்துவதற்கான செயல்முறைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பனை செய்வதற்கு ஒன்றிய அரசு முயற்சித்து வந்தது. இதற்காக கடந்த அக்டோபரில் நடந்த ஏலத்தில் ஏர் இந்தியாவை  டாடா நிறுவனம் ரூ.18ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. டிசம்பர் மாத இறுதிக்குள் விற்பனைக்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவடையும் என்று ஒன்றிய அரசு கூறியிருந்தது. ஏர் இந்தியாவின் ரூ.15ஆயிரத்து 300கோடி கடனை டாடா நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது போக மீதி தொகையான ரூ.2700கோடியை ரொக்கமாக டிசம்பர் மாத இறுதிக்குள் ஒன்றிய அரசிடம் டாடா நிறுவனம் வழங்குவதாக கூறியிருந்தது.

இந்நிலையில் விற்பனைக்கான நடைமுறையை முடிப்பதில் எதிர்பார்த்ததை விட கூடுதல் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியாவை டாடா குழுமம் கையகப்படுத்துவது மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என கூறப்படுகின்றது. விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனைத்து செயல்முறைகளும் 8 வாரங்களில் முடிக்கப்பட  வேண்டும். ஆனால் இருதரப்பு விருப்பத்தின் பேரில் இந்த தேதியை மேலும் நீட்டிக்க முடியும். எனவே டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியாவை ஒப்படைப்பது ஜனவரி மாதம் வரை தாமதமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: