நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு நீச்சல்குளம் ரெடி

நெல்லை : நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானைக்கு 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீச்சல்குளம் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆனித்தேரோட்டம், ஐப்பசி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் பிரசித்தி பெற்றதாகும்.

இக்கோயிலில் 52 வயதான காந்திமதி என்ற யானை உள்ளது. காந்திமதி யானை ஆண்டு தோறும் அறநிலையத்துறை மூலம் நடத்தப்படும் யானைகள் நலவாழ்வு முகாமிற்கு அழைத்து செல்லப்படுவது வழக்கம். நல வாழ்வு முகாமில் நல்ல சத்தான மூலிகை உணவு, உடற்பயிற்சி, விளையாட்டுகளில் பங்கேற்று சுறுசுறுப்பாக காந்திமதி யானை உள்ளது. தினமும் கோயில் ரதவீதி, மற்றும் வெளி பிரகாரத்தில் நடைபயிற்சியும் அழைத்துச் செல்லப்படுகிறது.

நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு தினமும் தாமிரபரணி நதியில் இருந்து காந்திமதி யானை தீர்த்தம் எடுத்து வரும். இதுவும் யானைக்கு  நடைபயிற்சியாக அமைந்தது. இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவலின் கராணமாக காந்திமதி யானையை தாமிரபரணி நதிக்கு அழைத்துச் சென்று குளித்து விட்டு சுவாமி, அம்பாளுக்கு தீர்த்தம் எடுத்து வருவதும் நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து காந்திமதி யானை குளிக்க கோயில் யானை தொழுவத்தில் ஷவர் பாத் அமைக்கப்பட்டது. இதில் தினமும் காந்திமதி யானை குதூகலமாக குளித்தது. மேலும் அறநிலையத்துறை மூலம் திருச்சி, திருவானைக்காவல், பழனி, ஸ்ரீரங்கம், நெல்லையப்பர் கோயில்களில் உள்ள யானைகள் குளிக்க நீச்சல் குளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு அம்மன் சன்னதி வசந்த மண்டபம் அருகே ரூ. 10 லட்சம் செலவில் நீச்சல் குளம் அமைக்க கடந்த அக்டோபர் மாதம் பூமி பூஜை நடந்தது. இதைதொடர்ந்து 22 அடி நீளத்திலும், 26 அடி அகலத்திலும் ஒன்றரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது நீச்சல் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வசந்த மண்டபம், அம்மை, அப்பர் தோட்டம் உள்ளிட்ட 3 இடங்களில் ஆழ்துளை கிணறு மூலமும், கோயில் தெப்பக்குளத்தில் இருந்தும் தண்ணீர் கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தில் காந்திமதி யானை எளிதாக இறங்கி குளிக்கும் சறுக்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு காந்திமதி யனை குளிக்க விரைவில் நீச்சல்குளம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அறநிலையத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

Related Stories: