பிரமோஸ் ஏவுகணையை இந்தியா தயாரிப்பது ஏன்? ராஜ்நாத் சிங் பேச்சு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில், ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு’ (டிஆர்டிஓ) சார்பில், பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் சோதனை மையம் மற்றும் பிரமோஸ் ஏவுகணை உற்பத்தி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றனர். விழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியா தயாரிக்கும் அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் பிரமோஸ் ஏவுகணை, பிற ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை வேறு எந்த நாட்டையும் தாக்குவதற்காக அல்ல. பிற நாட்டை தாக்குவதோ, பிற நாட்டின் நிலங்களை அபகரிப்பதோ இந்தியாவின் குணாதிசயம் கிடையாது.

உள்நாட்டில் பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பதன் நோக்கம், இந்தியாவை தீய எண்ணத்துடன் பார்க்கும் துணிச்சல் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது என்பதற்காகத்தான். உலகின் எந்த நாடுகள் நம்மை தாக்காதபடி, அணுசக்தி தடுப்பு அமைப்புகள் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம். ஒரு அண்டை நாடு, உரி, புல்வாமாவில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றியது். இதற்காக, அந்நாட்டின் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் மறைவிடங்களை அழித்தோம். வான்வழித் தாக்குதலை நிறைவேற்றினோம். இதன் மூலம், யாராவது நம் மீது தீய பார்வை பார்த்தால், எல்லையை தாண்டிச் சென்று அவர்களை தாக்குவோம் என்ற செய்தியை தந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: