நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற திமுகவினர் களப்பணியாற்ற வேண்டும்: கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பீளமேடு: கோவை காளப்பட்டியில் திமுக புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து இளைஞர்கள், இளம்பெண்கள் ஆயிரம் பேர் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாமை திமுக இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி  ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் பேசியதாவது: கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இளைஞர் அணி செயலாளராக ஒரு தொகுதிக்கு இளைஞர் அணியில் 10 ஆயிரம் பேர் புதிதாக சேர்க்க வேண்டும் என்று எனக்கு தலைவரால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 24 லட்சம் பேரை புதிதாக இளைஞர் அணியில் சேர்த்தேன். தலைவர் எனக்கு கொடுத்த இலக்கை போல இப்போது மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், உங்களுக்கும் ஒரு இலக்கை கொடுத்துள்ளார். அதன்படி, 2 கோடி பேரை திமுகவில் சேர்க்க வேண்டும்  என்ற இலக்கை கொடுத்துள்ளார்.

கடந்த 8 மாத கழக ஆட்சியின் சாதனைகளையெல்லாம் மக்களிடத்தில் கொண்டு சேர்த்து வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நம்முடைய வெற்றிக்கு உழைத்திட வேண்டும். அந்த வெற்றிக்காக நீங்கள் ஒவ்வொருவரும் களப்பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் இங்கு பேசும்  போது விரைவில் எனக்கு அமைச்சர் பதவி  கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அதை தாண்டி துணை முதல்வர் அளவிற்கு என்னை கொண்டு சென்று விட்டனர். அந்த மாதிரி பொறுப்பை நான் விரும்பவில்லை. என்றும் மக்கள் பணியில் உங்களோடு ஒருவனாக, திமுகவுக்காக கடைசி வரை உழைக்க வேண்டும்  என்ற ஆசை தான் உள்ளது. உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று  நினைப்பவன். தலைவருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். தலைவருக்கும்  உங்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் என்றார்.

Related Stories: