குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் உதிரிபாகங்கள் அனைத்தும் சூலூர் விமானப்படை தளத்துக்கு சென்றன: ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து நஞ்சப்பசத்திரம் விடுவிப்பு

குன்னூர்: குன்னூர் அருகே  விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் உதிரிபாகங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. விபத்து  ஏற்பட்டு 18 நாட்களாக ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நஞ்சப்பசத்திரம் பகுதி சீல் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8ம் தேதி ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில்  முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஏர்மார்ஷல் மன்வேந்தர் சிங் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

விபத்து ஏற்பட்ட பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. விபத்துக்குள்ளான இடம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. கடந்த நான்கு நாட்களாக விபத்து ஏற்பட்ட ஹெலிகாப்டரின் சிறிய பொருட்கள் உடைத்து கொண்டு செல்லப்பட்டன. ஹெலிகாப்டரின் பெரிய பாகங்களை உடைக்காமல் அப்படியே கொண்டு செல்ல திட்டமிட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு எலக்ட்ரிக் ரோப் மூலம் இன்ஜின் உட்பட பெரிய பாகங்களை அப்புறப்படுத்தி லாரிகளில் ஏற்றி கோவை அருகே சூலூர் விமானப்படை தளத்துக்கு  கொண்டு சென்றனர். நேற்று காலை முதல் அந்த பகுதியில் சீல் அப்புறப்படுத்தப்பட்டது. அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் அங்கிருந்து சென்றனர். கடந்த 18 நாட்களாக ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நஞ்சப்ப சத்திரம் பகுதி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. குன்னூர் அருகே விபத்து நடந்த இடத்தில் ராணுவ ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது.

Related Stories: