கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி குற்றாலம், பாபநாசம் அருவியில் கூட்டம் அலைமோதல்

வி.கே.புரம்:  ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் பாபநாசம் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் குற்றாலம் அருவிகளில் குளிக்கவும் மக்கள் குவிந்தனர். மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள குற்றாலம் அருவியில் சீசன் காலங்களில் மட்டும் தண்ணீர் கொட்டும். அதைப்போல களக்காடு அருவியில் மழை நேரங்களில் மட்டும் தண்ணீர் விழும். பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆண்டுமுழுவதும் தண்ணீர் விழும். இதனால் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வார்கள்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 21 மாதங்களுக்கு பிறகு கடந்த 22ம் தேதி முதல்  அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாள்தோறும் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குளித்து மகிழ்ந்தனர். நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அனைத்து வாகனங்களும் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் சோதனைக்கு பிறகே அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அருவிக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டணமாக ரூ.50ம், நபர்களுக்கு தலா ரூ.10ம் வசூலிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் பரவலாக தண்ணீர் விழுந்தது. இங்கும் குளித்து மகிழ திரளானோர் குவிந்தனர்.

Related Stories: