பேரணாம்பட்டில் மீண்டும் நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

குடியாத்தம்: வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை, மீனூர் மலை, அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் கடந்த மாதம் தொடர்ந்து, அடுத்தடுத்து 4 நாட்கள் நில அதிர்வு ஏற்பட்டது. அதில், ஒரு வீட்டில் முழுமையாக விரிசல் ஏறப்பட்டது. அதிகபட்சமாக 7 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். தொடர்ந்து குடியாத்தம் டி.டி.மோட்டூர், கமலாபுரம், சின்டகன்வாய் ஆகிய கிராமங்களில் கடந்த வாரம் 3 நாட்கள் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டது. கடந்த 22ம் தேதி பேரணாம்பட்டு நகர், தரைக்காடு, எம்ஜிஆர் நகர், கலைஞர் நகர், சின்னதாம்பல் தெரு ஆகிய பகுதிகளில் 2 நாட்கள் நில அதிர்வு ஏற்பட்டது. இதில், 2 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக-ஆந்திர எல்லையான வீ.கோட்டா ரோடு பகுதியில் அடுத்தடுத்து 3 முறை நில அதிர்வு ஏற்பட்டது.

இதனால், வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டோடின. மேலும், நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்ததால், வீட்டை விட்டு வெளியே ஓடி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் ஆர்டிஓ தனஞ்செழியன் அங்கு சென்று ஆய்வு செய்தார். குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் தொடர் நிலஅதிர்வால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் தரைக்காடு, வி.கோட்டா ரோடு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணியளவில் மீண்டும் அடுத்தடுத்து 2 முறை பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மீண்டும் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். தொடர் நில அதிர்வுகளால் பீதியடைந்துள்ள அப்பகுதி மக்கள் வீட்டினுள் இருப்பதற்கு அச்சமடைந்து, பெரும்பாலும் வீதியிலேயே உள்ளனர். இரவிலும் நிம்மதியாக தூங்க முடியாமல் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

* 15 நாட்களில் ஆய்வு தொடங்கும்

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பேரணாம்பட்டு தரைக்காடு குடியிருப்பு பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது ஏற்பட்டுள்ள நிலஅதிர்வால் பெரிய ஆபத்து எதுவுமில்லை. பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். இதுகுறித்து வேலூர் விஐடி பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் ஆராய்ச்சி செய்ய உள்ளனர். அதன்படி அடுத்த 15 நாட்களில் ஆய்வு தொடங்கும். ஆய்வறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

Related Stories: