அடுத்த மாதம் 28ம் தேதி மண்டேலா அடைக்கப்பட்ட சிறைச்சாலையின் சாவி ஏலம்: தடுத்து நிறுத்தும் முயற்சியில் தென் ஆப்ரிக்கா

ஜோகன்னஸ்பர்க்: நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த ராபன் சிறைச்சாலை அறையின் சாவியை ஏலம் விடும் முயற்சியை தென் ஆப்ரிக்கா கடுமையாக எதிர்த்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராக அகிம்சை வழியில் போராடியவர் நெல்சன் மண்டேலா. மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், அகிம்சை வழியில் போராடி வெற்றி கண்டார். தனது போராட்டத்தின் போது, 27 ஆண்டுகள் ராபன் தீவு சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு, தென் ஆப்ரிக்காவில் ஜனநாயக முறையில் நடந்த முதல் தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாட்டின் அதிபராக மண்டேலா பதவியேற்றார்.

இந்நிலையில், மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை அமெரிக்காவை சேர்ந்த கர்ன்சே எனும் ஏல நிறுவனம் வரும் ஜனவரி 28ம் தேதி ஆன்லைனில் ஏலத்தில் விடுவதாக அறிவித்துள்ளது. இந்த சாவி, மண்டேலாவின் ஜெயிலராக இருந்த கிறிஸ்டோ பிராண்ட் மூலமாக ஏலத்தில் விடப்படுகிறது. இத்துடன், மண்டேலா பயன்படுத்திய கண்ணாடி உள்ளிட்ட சில பொருட்களும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ் பரிசாக வழங்கிய பேனா ஆகியவையும் ஏலத்தில் விடப்பட உள்ளன. இவை பல கோடிக்கு ஏலத்தில் போகும் கர்ன்சே நிறுவனம் கூறி உள்ளது.

இந்நிலையில், ராபன் சிறை சாவியை ஏலத்தில் விட தென் ஆப்ரிக்க அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டின் விளையாட்டு, கலாச்சார துறை அமைச்சர் நதி மத்தேத்வா அளித்த பேட்டியில், ‘‘எங்கள் நாட்டின் வலிமிகுந்த வரலாற்றை கூறும் ராபன் சிறைச்சாலையின் சாவி, தென் ஆப்ரிக்க மக்களுக்கு சொந்தமானது. அது எந்த நபரின் சொத்தும் அல்ல. ராபன் தீவு சிறைச்சாலையின் உண்மையான சாவி இப்போதும் உள்ளது. எனவே, ஏலம்விடப்படும் சாவி போலியானதாக கூட இருக்கலாம். சாவியை ஏலத்தில் விடுவதை அனுமதிக்க முடியாது,’’ என்றார். ராபன் தீவு சிறைச்சாலை தேசிய நினைவுச் சின்னமாகவும், தேசிய அருங்காட்சியகமாகவும் உள்ளதோடு, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: