முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்; 15ம் ஆண்டு நினைவுதினத்தை அனுசரித்த இலங்கை தமிழர்கள்: பெண்கள் உட்பட பலர் கைது

கொழும்பு: இலங்கையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நிறைவடைந்த 15ம் ஆண்டு நினைவு தினத்தை இலங்கை தமிழர்கள் நேற்று அனுசரித்தனர். இலங்கையில் 30 ஆண்டாக நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009ம் ஆண்டு மே 18ம் தேதி முடிவுக்கு வந்ததாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் தஞ்சமடைந்த ஏராளமான தமிழர்கள் இறுதிப்போரில் கொல்லப்பட்டனர். இதன் 15ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

போரில் உயிரிழந்த தங்கள் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இலங்கை தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை கொண்டாடும் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்த இலங்கை போலீசார் பல இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களை கைது செய்தனர். பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும், தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் 15ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இறுதிகட்ட போர் நடந்த முள்ளிவாய்க்காலில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமார்ட் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்த நினைவு தினம், இலங்கையில் 30 ஆண்டாக நடந்த உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் அடைந்த கூட்டு தோல்வியை நினைவுபடுத்துகிறது’’ என்றார். இதைத் தொடர்ந்து இலங்கை அரசு சார்பில் தலைநகர் கொழும்பில் இன்று போர் வெற்றி தினம் கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்; 15ம் ஆண்டு நினைவுதினத்தை அனுசரித்த இலங்கை தமிழர்கள்: பெண்கள் உட்பட பலர் கைது appeared first on Dinakaran.

Related Stories: