சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி மாஜி முதல்வர் எடப்பாடி பி.ஏ.வின் கூட்டாளி கைது: 2 மாதத்துக்கு பிறகு சிக்கினார்

சேலம்: சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில், மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிஏவின் கூட்டாளியான அதிமுக பிரமுகரை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே குறிஞ்சிப்பாடியை சேர்ந்த இன்ஜினியர் தமிழ்ச்செல்வனிடம் (28), போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி செய்த வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளரான ஓமலூர் நடுப்பட்டியை சேர்ந்த மணி (51) கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவரது கூட்டாளியான செம்மாண்டப்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்வகுமாரை (49) தேடி வந்தனர். அவரை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் செல்வகுமார் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலையில், தனிப்படையினர் அப்பகுதிக்கு சென்று, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே பதுங்கியிருந்த செல்வகுமாரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர், எஸ்பி அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், ‘‘போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை என பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் நானும், எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியும் ரூ.1 கோடியே 39 லட்சத்து 50 ஆயிரம் பணம் வாங்கினோம். அதில், ரூ.82.50 லட்சத்தை திரும்ப கொடுத்துவிட்டோம். தமிழ்ச்செல்வனிடம் வேலைவாங்கித் தருவதாக பணம் பெற்றோம். ஆனால் வேலை வாங்கிக் கொடுக்க முடியவில்லை,’’ எனக்கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, செல்வகுமாரை சேலம் ஜுடீசியல் மாஜிஸ்திரேட் (எண்1) கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட் உத்தரவின்படி சங்ககிரி கிளை சிறையில் அடைத்தனர். கடந்த 2 மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த எடப்பாடி பழனிசாமி பிஏவின் கூட்டாளி செல்வகுமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: