வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை: ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில்பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துதல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பொது இடங்களில் மற்றும் மக்கள் அதிக கூடும் இடங்களான வணிக வளாகங்கள், வியாபாரம் நடைபெறும் இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பதை கவனத்தில் கொண்டு வருகிறேன். அதிவேகமாக ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது.

எனவே பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் கொண்டு கை கழுவுதல், தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகப்படுத்துவது, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பொது சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதல்களை மீண்டும் முன்னிலைபடுத்துவதால் தான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் கடினமாகிவிடும்.

முதல்வரின் பரிசீலினைக்கு பிறகு நேற்று வெளியிடப்பட்ட விரிவான செய்தி குறிப்பில் பொதுசுகாதார நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றுவதன் அவசியத்தையும், கோவிட் பொருத்தமான நடவடிக்கைகளை அவசியத்தை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். யாரேனும் ஒருவர் சோதனைக்கு வந்தால் முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பிறகு கண்காணிக்கப்படுபவர்களின் தனிமைப்படுத்தலை பின்பற்ற வேண்டும். இடைப்பட்ட காலம் மற்றும் 8 வது நாட்களில் அறிகுறிகள் தென்பட்டால் ஆர்டிபிசிஆர் சோதனைகள் செய்ய வேண்டும். பயண வரலாறு இல்லாதவர்கள், அதே நேரத்தில் அறிகுறிகள் கொண்டவர்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வரும் பட்சத்தில் நோய் தொற்றின் மூலத்தை கண்டறிய பரிசோதனை செய்து கண்காணிக்க வேண்டும்.

தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள், தாமதமானவர்களுக்கு தடுப்பூசிகளை தீவிரமாக பின் தொடர்ந்து வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியருக்கு செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories: