இனி தப்பிக்க வாய்ப்பே இல்ல!: பண மோசடி வழக்கில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகள் முடக்கம்..காவல்துறை அதிரடி..!!

சென்னை: பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கை காவல்துறை முடக்கியுள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீசார், ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.

இதனிடையே தலைமறைவாக உள்ள அவர் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் - அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் 8 தனிப்படை போலீசார், ராஜேந்திர பாலாஜியை 9வது நாளாக தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி, கடல் வழியாக தப்பி செல்வதை தடுக்க கடலோர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பண பரிவர்த்தனை மூலமாக ராஜேந்திர பாலாஜியின் நகர்வுகளை தடுக்கும் வகையில் வங்கி கணக்கை காவல்துறை முடக்கியுள்ளது.

ராஜேந்திர பாலாஜி பெயரில் உள்ள 6 வங்கி கணக்குகளையும் முடக்கி காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதுகுறித்து வங்கி நிர்வாகத்துக்கு விருதுநகர் மாவட்ட போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் ராஜேந்திர பாலாஜிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தலைமறைவாக உள்ள அவர் விரைவில் கைதாகவும் வாய்ப்புள்ளது.

Related Stories: