ஓட்டேரியில் நடத்தை சந்தேகத்தால் விபரீதம்: மனைவி கொலை: தப்பிய கணவனுக்கு வலை

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் 4வது தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (46). பூந்தமல்லியில் உள்ள தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வாணி (41). சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இருவரும் கடந்த 2005ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கவுதம் (15), ஹரீஷ் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வாணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைப்பாராம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துகொண்டு அன்றிரவு 11 மணியளவில் துணிகளை எடுத்துக்கொண்டு ரமேஷ் வீட்டைவிட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது மூத்த மகன் கவுதம், அம்மா எங்கே என தந்தையிடம் கேட்டபோது, வேறு ஒருவருடன் ஓடிப்போய்விட்டாள் என கூறியுள்ளார். இதையடுத்து மறுநாள் காலை தாய் வீட்டில் இல்லாததால் இரு மகன்களும் தேடியுள்ளனர். எங்குமே இல்லாததால் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை ஹரீஷ், எழுந்து பார்த்தபோது டிவி வைத்துள்ள டேபிளுக்கு கீழே இருந்து ரத்தம் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். லேசான துர்நாற்றமும் வந்துள்ளது. உடனே இதுகுறித்து இவர்களது வீட்டின் கீழ்ப்பகுதியில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் சுதர்சனிடம் தெரிவித்துள்ளார். சுதர்சன் மேலே வந்து பார்த்தபோது துர்நாற்றம் வீசியதால்  ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் டிவி வைத்துள்ள டேபிள் அடியில் இருந்த துணி மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் முகத்தில் பலத்த காயங்களுடன் வாணி கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.  பின்னர், வாணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரமேஷை தேடிவருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வாணியின் உடம்பில் ஆயுதங்களை வைத்து அடித்ததாக தெரியவில்லை. இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டபோது சுவற்றில் தள்ளிவிட்டு இருக்கலாம். தலையில் அடிப்பட்டு வாணி இறந்ததால் கொலையை மறைப்பதற்காக மூட்டைகட்டி வைத்துவிட்டு ரமேஷ்  தப்பியிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் வாணி எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவியை கொலை செய்த சம்பவம்  ஓட்டேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: