பெரணமல்லூரில் கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கும் மகப்பேறு கட்டிடம்-பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை

பெரணமல்லூர் : பெரணமல்லூர் அருகே சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு வந்த மகப்பேறு கட்டிட பணி முடிந்தும் ஒப்படைக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரணமல்லூர் பகுதி வளர்ச்சியின்றி தவித்து வருகிறது. இவற்றில், சுகாதார துறையை பொருத்தமட்டில் ஒரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகிறது.‌ இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களை நம்பி ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பலர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.‌ இதில் பெரணமல்லூர் வட்டார தலைமையிடத்து ஆரம்ப சுகாதார நிலையம் கொழப்பலூர் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு அதிகளவில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த வளாகத்தில் கடந்த 2017ம் ஆண்டு பொதுப்பணித்துறையினர் சுமார் ₹75 லட்சம் மதிப்பில் மகப்பேறு கட்டிடம் மற்றும் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு கட்டிட பணிகள் தொடங்கியது. இதில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் ஓராண்டுக்கு முன்னர் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் மகப்பேறு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண்டாக திறக்கப்படாமல் தொடர்ந்து மூடியே உள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் இட நெருக்கடியால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செய்யாறு சுகாதார மாவட்டத்தில் பிரசவம் பார்ப்பதில் சிறந்து விளங்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிட வசதி இருந்தும் திறக்கப்படாமல் இருப்பது மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘அந்த கட்டிடம் கட்டி முடித்து சுகாதார துறையிடம் ஒப்படைத்து விட்டோம்’ என்று தெரிவிக்கின்றனர். ஆனால் சுகாதார துறை தரப்பிலோ, ‘எங்களிடம் ஒப்படைக்க வில்லை’ என கூறி வருகின்றனர். இரு தரப்பினரின் முரண்பட்ட தகவலால் பொதுமக்கள், கர்ப்பிணிகள் பாதிப்படைகின்றனர். எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறையினர் கட்டிடத்தை திறக்க உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: