டெல்லி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தமிழ் பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு கனிமொழி எம்பி கடிதம்

சென்னை: ‘டெல்லி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தமிழ் பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப வேண்டும்’ என்று ஒன்றிய கல்வி அமைச்சருக்கு, கனிமொழி எம்பி கடிதம் எழுதியுள்ளார். திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி திமுக எம்பியுமான கனிமொழி ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான டெல்லி பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையில் காலியாக உள்ள பேராசிரியர் பணி இடங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பாததால், தமிழ் துறை சார்பில் பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்படும் வகுப்புகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முதுகலை படிப்புகளை வழங்கும் டெல்லி பல்கலைக்கழக தமிழ் துறையில் அனைத்து வகையிலான பேராசிரியர் பணி இடங்கள், 2 இணை பேராசிரியர்கள் மற்றும் 2 உதவி பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பேராசிரியர் இல்லாத காரணத்தால் ஒன்றிய கல்வியியல் நிறுவனத்தில் தமிழ் பி.எட். படிப்பு கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. மிராண்டா அவுஸ் கல்லூரி மற்றும் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் தமிழ் பேராசிரியர்களுக்கான பணி இடங்கள் காலியாக உள்ளன. காலியான அந்த இடங்களை நிரப்புவதற்கு டெல்லி பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே காலியாக உள்ள தமிழ் பேராசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கு டெல்லி பல்கலைக்கழகத்துக்கு, ஒன்றியஅரசு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: