மார்கழி, பொங்கலையொட்டி வண்ணமிகு கோலமாவு தயாரிக்கும் பணி தீவிரம்

பெரம்பலூர் : மார்கழி, பொங்கலையொட்டி பெரம்பலூர் நகர்ப்புற பகுதியில் வண்ணமிகு கோலமாவு தயாரிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.மார்கழி திங்கள் மதி நிறைந்த நந்நாளாகும். மார்கழி மாதம் என்றாலே வீடு முன்பு போடப்படும் வண்ணமிகு கோலங்கள் என்றும் அழகுறச்செய்யும். மார்கழி முடிந்து தை பிறக்கும் போது தமிழர்களின் பொங்கல் பண்டிகைக்கும் வாசலை அலங்கரிக்க வண்ணமிகு கோலமாவின் தேவை அதிகமுள்ளது.

இதனையொட்டி வண்ணமிகு (கலர் கோல மாவு) தயாரிக்கும் பணி பெரம்பலூர் நகர்ப்புற பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் நகர் பகுதி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம்(63). சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கலர் கோலமாவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.கலர் கோலமாவு தயாரிப்புக்கான கலர் மெட்டீரியல்ஸ் ஈரோடு மாவட்டத்திலிருந்தும், கோலமாவு சேலம் மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டு கலர் கோல மாவு தயாரிக்கும் பணி இங்கு தடபுடலாக நடந்து வருகிறது.

மேலும் ரூ.5 முதல் ரூ.50 வரைக்கும், 100 கிராம் முதல் 1 கிலோ வரை பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்து வருகிறார். மார்கழி மாதம் தொடங்கிய தை முன்னிட்டு தற்போது கோலமாவு விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.10க்கும் மேற்பட்ட கலர் கோலமாவுப் பொடிகள் தயார் செய்து, உலர வைத்து விற்பனை செய்கிறார். மேலும் துறையூர், நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கோலமாவு மொத்தமாகவும், சில்லறையாகவும் கொடுக்கின்றார். ஏராளமான மொத்த வியாபாரிகள் தயாரிக்கும் இடத்திற்கே வந்து வாங்கி செல்கின்றனர்.

Related Stories: