மது போதையில் தகராறு போலீஸ்காரரை தாக்கி கடித்து குதறிய வக்கீல்: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பரபரப்பு

சென்னை: கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பேக்கரியில், ஒருவர் போதையில் தகராறு செய்வதாக கொடுங்கையூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற தலைமை காவலர் மாயக்கண்ணன் மற்றும் காவலர் லோகநாதன் ஆகியோர், போதை ஆசாமியை காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது, அவர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக

கூறப்படுகிறது. இதனையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர், வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் 2வது சந்து பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (29) என்பதும், வழக்கறிஞர் என்பது தெரிந்தது. அவர், போதையில் இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்ய, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்ட சுரேஷ்குமார், தடுக்க முயன்ற காவலர் பாபு என்பவரை தாக்கி, அவரது கை விரல்களை கடித்து குதறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், பாபுவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சுரேஷ்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: