உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; பட்டம் வெல்வாரா கிடாம்பி ஸ்ரீகாந்த்? பைனலில் இன்று சிங்கப்பூர் வீரருடன் மோதல்

வெல்வா: 26வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் 12ம் நிலை வீரரான 28 வயதான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சக நாட்டைச் சேர்ந்த 20 வயதான லக்‌ஷயா சென்னுடன் மோதினார்.  இதில் முதல் செட்டை லக்‌ஷயா சென் 22-17 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த 2 செட்டிலும் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய கிடாம்பி ஸ்ரீகாந்த், 21-14, 21-17 என தன்வசப்படுத்தி வெற்றிபெற்றார். இந்த வெற்றி மூலம் உலக சாம்பியன் ஷிப் தொடரில் பைனலுக்குள் நுழைந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அரையிறுதியில் தோல்வியடைந்த லக்‌ஷயா சென்னுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.

மற்றொரு அரையிறுதியில் தரவரிசையில் 22வது இடததில் உள்ள சிங்கப்பூரின் 24 வயதான லோ கீன் யூ 23-21, 21-14 என்ற செட் கணக்கில், தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ஆண்டன்சனை தோற்கடித்து பைனலுக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் இறுதி போட்டியில், கிடாம்பி ஸ்ரீகாந்த்-லோகின் யூவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இதில் வெற்றி பெற்று முதன்முறையாக பட்டம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை ஸ்ரீகாந்த் படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பைனலில் வெற்றி பெற்றால் ஸ்ரீகாந்த்திற்கு தங்க பதக்கத்துடன் 91 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கிடைக்கும். தோல்வி அடைந்தால் வெள்ளிப்பதக்கத்துடன் 45.60 லட்சம் கிடைக்கும்.

Related Stories: