புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்

சிதம்பரம்: புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை (20ம்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தேரோட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக இன்று காலை 9 மணி முதல் கோயிலுக்குள் சாமி கும்பிட பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடராஜர் கோயில் தேரோட்டத்திற்கு அனுமதி அளிக்க கோரி நேற்று இரவு சாலை மறியல் போராட்டம் நடந்தது. சிதம்பரம் கீழவீதியில் நடராஜர் கோயில் எதிரே உள்ள சாலையில் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் பாஜக, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களும், பக்தர்களும் பங்கேற்றனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில், போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தேரோட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார். சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து குறைந்த அளவிலான பக்தர்களோடு தேரோட்டம் நடத்த வேண்டுகோள் விடுத்தார். தேரோட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

Related Stories: