ராணுவத்துக்கான தடைகள் தகர்ந்தது; சர்தாம் நெடுஞ்சாலை திட்டத்துக்கு அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்தியது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் சீனா எல்லை வரை செல்லும் சர்தாம் நெடுஞ்சாலையை 5.5 மீட்டருக்கு மேல் அகலப்படுத்தக் கூடாது என 2018ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை பின்பற்றும்படி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ராணுவ பயன்பாட்டுக்காக இந்த சாலையை விரிவுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பதால், தனது பழைய உத்தரவை மாற்றி அமைக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சகம் மனு தாக்கல் செய்தது. இது நேற்று விசாரணைக்கு வந்தது.

அது தனது மனுவில், ‘ரிஷிகேஷில் இருந்து மனா, ரிஷிகேஷ் முதல் கங்கோத்ரி மற்றும் தனக்பூரி இருந்து பித்தோராகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலைகளை இருவழிப் பாதையாக மாற்றுவதற்கான உத்தரவுகளையும், வழிகாட்டு விதிமுறைகளையும் மாற்ற வேண்டும்,’ என்று கோரி இருந்தது. இந்த மூன்று வழித்தடங்களிலும் 900 கிமீ தூரத்துக்கு சீனா எல்லை வரையில், ரூ.12 ஆயிரம் கோடி செலவில், எல்லா பருவநிலைகளிலும் ராணுவம் பயன்படுத்தும் வகையில் இந்த சாலை விரிவாக்க திட்டத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால், மலையில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதே நேரம், சீனாவுடன் போர் பதற்றம் நிலவுவதால், ஏவுகணைகளை வீசும் வாகனங்கள் உள்ளிட்ட ராணுவ கனரக வாகனங்கள் செல்லும் வகையில் இந்த சாலையை விரிவுப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக ராணுவம் தெரிவித்தது. இந்நிலையில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

பின்னர், நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் பாதுகாப்புக்கு சமீப காலமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொள்ளும்போது, ராணுவத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் இருவேறு கருத்துகளை கவனத்தில் கொள்ள முடியாது. எனவே, சர்தாம் இரட்டை வழிப்பாதை சாலை விரிவாக்க திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை நேரடியாக மேற்பார்வையிட முன்னாள் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் தவறான நோக்கம் எதுவும் இல்லை. ராணுவத்தின் இயக்கத்தை எளிதாக்குவதற்கு தேவையான உட்கட்டமைப்பை வசதிகளை ஏற்படுத்தி தரவும், அதற்கு தேவையான வசதிகளை பூர்த்தி செய்து கொடுக்கவும் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உரிமை உண்டு. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: