தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு

சென்னை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசினார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று குடும்பத்துடன் தமிழகம் வந்தார். அவர், திருச்சி ரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து சென்னை வந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று மாலை 4.50 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வர் சந்திரசேகர ராவை வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். சந்திரசேகர ராவுடன் அவரது மகனும் தெலங்கானா மாநில நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி, தொழில், வணிகம், மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான கே.டி.ராமா ராவ் மற்றும் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்று தனது வீட்டில் உள்ள அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழகிய கைவேலைப்பாடுகளுடன் செய்த பொருள் ஒன்றை பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடந்தது. தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்தினருடன் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஜனவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதை தொடர்ந்து நடைபெறும் மக்களவை தேர்தலில், பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தமிழகம் வந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று திடீரென சந்தித்து பேசியபோது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: